pages

Monday, October 25, 2010

IRAJ இசைத் தொகுப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?

 





(21.10.2010 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை)

ஆரம்ப காலத்தில் சிங்கள மன்னர் ஒருவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு அந்த மன்னர் ஒரு கிராமத்தையே பரிசளித்ததாக வரலாறுகளில் நாம் படித்திருக்கிறோம்.

ஆனால் இன்று பொலிசாரிடமிருந்து பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவரைக் காப்பாற்றும் முஸ்லிம் யுவதி ஒருவருக்கும் குறித்த இளைஞனுக்குமிடையில் காதல் மலர்வதை புதிய கதையாகப் படைத்திருக்கிறார், இலங்கையின் பிரபல சிங்களப் பாடகரும் தயாரிப்பாளருமான இராஜ் வீரரத்ன.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டுள்ள `சித்தி மனீலா' எனும் தலைப்பிலான குறித்த வீடியோ இசைத் தொகுப்பில் அடங்கியுள்ள இப் பாடலானது இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்தையும், குறிப்பாக இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதுடன் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தவறான புரிந்துணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் முற்பட்டிருக்கிறது.

அதான் ஒலியுடன் இப்பாடல் தொடங்குகிறது. பாதாள உலகத்தைச் சேர்ந்த குறித்த சிங்கள இளைஞனை (இப் பாத்திரத்தில் இராஜ் நடித்துள்ளார்) பொலிசார் துரத்திச் செல்கிறார்கள். அப்போது தனது வீட்டு முற்றத்தில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண் ஒருவர் இவ் இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்து பொலிசாரிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

இதனால் இவ் இளைஞனுக்கு குறித்த முஸ்லிம் யுவதியின் மீது காதல் மலர்கிறது. பின்னர் இந்த யுவதி தனது சக முஸ்லிம் யுவதிகளுடன் ஹிஜாப் அணிந்து வீதியால் நடந்து வரும்போது அவ் இளைஞர் தனது காதலை வெளிப்படுத்தும் முகமாக ரோஜாப் பூ ஒன்றை அவளுக்கு நீட்டுகிறார். அந்த யுவதியும் எந்த மறுப்புமின்றி அதனை வாங்கிச் செல்கிறார்.

பின்னர் இப் பாடலில் மாதம்பிட்டிய பள்ளிவாசல் காட்டப்படுகிறது. இப் பள்ளிவாசலிலிருந்து குறித்த முஸ்லிம் யுவதி பல ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறுமிகள் புடைசூழ வெளியே வருகிறார். அவளைப் பார்ப்பதற்காக குறித்த சிங்கள இளைஞர் தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருகிறார்.

பின்னர் இவ் இளைஞர் அப் பெண்ணின் வீட்டுக்கு இரவு வேளையில் வருகிறார். இருவரும் தவறான முறையில் நடந்து கொள்கின்றனர். பின்னர் இவ் இளைஞன் வீட்டுக்குள் இருந்து வெளியே வரும்போது அதனை அப் பெண்ணின் தந்தை அவதானிக்கிறார். இருவருக்குமிடையில் உரையாடல் நடந்த பிற்பாடு தந்தையின் சம்மதத்துடன் இப் பெண்ணை அவ் இளைஞர் அழைத்துச் செல்கிறார்.

இவர்கள் இருவரும் காரில் பயணிக்கும் போது தொப்பி அணிந்த ஒரு பாதாள உலக கோஷ்டித் தலைவன் இவர்களை வழி மறித்து துப்பாக்கியால் சுடுகிறார். உடனே அந்த யுவதி முன்னால் பாய்ந்து தனது காதலனைக் காப்பாற்ற முயற்சித்து பின்னர் சூடுபட்டு இறக்கிறார். பின்னர் அவளது காதலனும் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  இக் காட்சியுடன் பாடல் முடிவுக்கு வருகிறது. முடியும் போதும் பின்னணியில் அதான் ஒலிக்கிறது. இடையிலும் ஒரு தடவை அதான் ஒலியைக் கேட்க முடிகிறது.

பாடலில் இடம் பெற்ற சில காட்சிகள்...

ஒட்டு மொத்தத்தில் இப் பாடல் முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறு தவறான கருத்தியல்களைக் கட்டமைக்க முற்பட்டுள்ளது.

முஸ்லிம் யுவதிகள் ஒழுக்கமற்றவர்களாகவும் முஸ்லிம் இளைஞர்கள் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்களாவும் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ள அதேவேளை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் யாருடைய அனுமதியுடன் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டது? இதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடந்தையாக இருந்ததா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. அத்துடன் இறையில்லத்தை நோக்கி அழைக்கும் புனித அதான் ஒலியை ஒரு மோசமான பாடலில் உட்புகுத்துவதற்கான அனுமதியை அதன் தாயரிப்பாளருக்கு வழங்கியது யார்? மொத்தத்தில் இவ்வாறானதொரு தவறான கருத்தியலை கட்டமைப்பதை பார்த்துக் கொண்டு முஸ்லிம் தலைமைகள் வாளாவிருக்க முடியுமா?

எனவேதான் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உடனடியாகக் கவனம் செலுத்தி இப் பாடல் தொகுப்புக்கு தடை விதிப்பதோடு பாடகர் இராஜுக்கு இதன் பாரதூரத்தை தெளிவுபடுத்தவும் முன்வர வேண்டும்.

2 comments:

Admin said...

டேய். அவனாச்சும் பரவாயில்ல. ஆனா நீ பாட்டயே போட்டு ஒலகத்துக்கே காட்டிட்டே! நீ தாண்டா மனுசன். நானும் பாத்துட்டேன்.

Anonymous said...

இந்த இராஜ் என்பவன் தானே,தமிழ்நாட்டுக் கழிசடை விஜய் ஆண்டனி என்பவனோடு சேர்ந்து தமிழருக்கு எதிராக ஆட்டம் போட்டவன்.. சிங்களத்தின் இனப்படுகொலைக்கு முட்டுக் கொடுக்கும் பாடலை, ராணுவதுக்கு உற்சாகமூட்டும் வெறிப்பாடல்களைப் பாடியவன்? முதலில் தமிழனைக் குதறியாகி விட்டது? அடுத்தது தமிழ்ப் பேசும் இசுலாமியரா இவன் குறி?

Post a Comment