கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முற்றிலும் புதிய ஒரு திருப்பத்தை கூடிய திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கூகுள் “குரோம் “ என்ற பெயரில் சென்ற நவம்பர் 19ல் வெளியிட்டது. இதன் சோர்ஸ் கோட் எனப்படும் கட்டமைப்பு வரிகளை தன்னுடைய இணைய தளத்தில் கூகுள் வெ
ளியிட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்க இன்னும் ஓர்ஆண்டு ஆகலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றவுடன் அது ஒரு டிவிடியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும், இதன் கட்டமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியாகக் கிடைக்காது. கம்ப்யூட்டர்களில், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களில் பதிந்து கிடைக்கும். எப்படி மொபைல் போனில் நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிக்காமல், அதில் பதிந்து வருவதனைப் பயன்படுத்துகிறோமோ, அதே போல குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து வரும் கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வரும்.
குரோம் ஓ.எஸ். குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால்,வெப் பிரவுசர் இங்கே டெஸ்க் டாப் கம்ப்யூட்டராகச் செயல்பட உள்ளது. எல்லாமே இணையதளத்துடன் கூடிய தொடர்பாகவே அமையும்.
வழக்கமான பைல், போல்டர், டிரைவ் எல்லாம் இருக்காது. எல்லாமே இணையத்தில் சேர்த்து வைக்கப்படும்.
குரோம் ஓ.எஸ். உள்ள கம்ப்யூட்டரில் ஷட் டவுண் பட்டன் இருக்காது. ஸ்லீப் மோடில் தான் இருக்கும். எனவே தொட்டவுடன் இயங்கத் தொடங்கி இணையத்தில் உங்களை அமர வைக்கும்.
கம்ப்யூட்டரில் எந்த சாப்ட்வேருக்கும் அப்டேட் தேவையில்லை. எல்லா அப்ளிகேஷனும் இணையத்திலிருந்தே நமக்குத் தரப்படுவதால், அப்போது தயாராக அப்டேட் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புதான் பயன்படுத்தக்கிடைக்கும்.
எதுவுமே கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படமாட்டாது. எனவே வைரஸ் தாக்கி கெடுக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமே இல்லை. அதிக பாதுகாப்பான, கவலையற்ற கம்ப்யூட்டிங் சுகம் கிடைக்கும்.
இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு பெரும்பாலும் இன்டர்நெட்டைச் சார்ந்து இருப்பதனை உணர்ந்த கூகுள், வாடிக்கையாளர்களுக்கு அதன் வழியிலேயே முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டினையும் தரும் வகையில், குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டத்தை இயக்கியவுடன் இன்டர்நெட்டில் இணைந்து, உங்களுக்கு என்ன பயன்பாடு வேண்டும் என்கிற ஆப்ஷன் கேட்கப்படும். டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட், அனிமேஷன், இணைய தளம், ஆடியோ வீடியோ எடிட்டிங் இன்னும் பல செயல்பாடுகள் பட்டியலிடப்பட்டு நீங்கள் எது வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் தேவையான பைல்களை உருவாக்கலாம். ஏற்கனவே உருவாக்கி இருப்பதனை எடிட் செய்திடலாம். பின் இவற்றை நீங்கள் விரும்பினால், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க், சிடி அல்லது பென் டிரைவில் பதிந்து சேவ் செய்து வைக்கலாம். இல்லை என்றால் குரோம் சிஸ்டம் மூலம் பெறும் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியைப் பயன்படுத்தி சேவ் செய்திடலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், குரோம் ஓ.எஸ். உள்ள ஒரு கம்ப்யூட்டர் மூலம் உங்கள் பைல்களை நீங்கள் எடிட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து பைல்களைத் தயார் செய்தது போல அவற்றை உருவாக்கலாம்.
இதனால் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை நீங்கள் விலை கொடுத்து வாங்கி உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கத் தேவையில்லை. எங்கே அவை கரப்ட் ஆகி, தக்க தருணத்தில் காலை வாரிவிடும் வகையில் கிராஷ் ஆகிவிடுமோ என்ற கவலை இல்லை. சேவ் செய்து வைக்க அதிகக் கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கிப் பொருத்த வேண்டியதில்லை. இவற்றை எல்லாம் குரோம் ஓ.எஸ். மூலம் பெற்றுக் கொள்ளலாம்.இதனால் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை, உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்க வேண்டியதில்லை.
ஆன்லைனில் அனைத்தும் இயங்குவதால் வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியன அடங்கியதாக நம் கம்ப்யூட்டர் அனுபவம் இருக்கும். குரோம் ஓ.எஸ். இயங்க 7 விநாடிகள் போதும். எதிர்காலத்தில் இந்த கால அவகாசம் இன்னும் குறையும்.
குரோம் ஓ.எஸ். முகப்பு தோற்றத்தில் குரோம் பிரவுசரைப் போலவே தோற்றமளிக்கும். கூகுள் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் (டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷிட், கிராபிக்ஸ் போன்றவை) அனைத்தும் தனித்தனி டேப்களில் தரப்பட்டிருக்கும். எது வேண்டுமோ அதற்கான டேப்பினைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.நம்மிடம் உள்ள மெமரி கார்டு, மொபைல் போன், கேமரா ஆகியவற்றை கம்ப்யூட்டரில் இணைத்து அவற்றில் உள்ள படங்கள், ஆடியோ வீடியோ பைல்களைக் கம்ப்யூட்டர் பைல்களாக இயக்கலாம்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்படி வாங்கி இணைப்பது? தேவையே இல்லை. “குரோம் சிஸ்டம் பதிந்த கம்ப்யூட்டர்' என்று மட்டுமே கேட்டு வாங்க முடியும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியே கிடைக்காது. இதற்காகக் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் பேசி வருகிறது. முதலில் குரோம் ஓ.எஸ். பதிந்த நெட்புக் கம்ப்யூட்டர்கள் மட்டுமே கிடைக்கும். பின் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் கிடைக்கும். தற்போது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இடத்தில் லேப் டாப் கம்ப்யூட்டர்களும், லேப் டாப் இடத்தில் நெட்புக் கம்ப்யூட்டர்களும் இடம் பிடித்து மக்களிடையே பரவி வருகின்றன. எனவே தான் குரோம் ஓ.எஸ். முதலில் நெட்புக் கம்ப்யூட்டர்களில் தரப்பட இருக்கிறது.
இப்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் விண்டோஸ், மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் எல்லாம் இணையம் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் தொடங்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைப்பவை. இப்போது எல்லாமே இன்டர்நெட் என்று ஆகிவிட்ட நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு, குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.
மக்கள் தங்கள் கம்ப்யூட்டரில் எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இமெயில் பார்க்க வேண்டும் எனில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கி, பிரவுசர் அல்லது இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி, இணைய தளத்தை அணுகி என அதிக நேரம் செலவழித்த பின்னரே இமெயிலைப் பெறுகின்றனர். இந்த தடைகற்களை நீக்கி வேகமாக இமெயிலைப் பெற்றுத் தருகிறது குரோம் ஓ.எஸ்.
வழக்கமான கம்ப்யூட்டர் பயன்பாட்டிலிருந்து, முற்றிலும் மாறுதல்களுடன், கவலையற்ற, அதி வேகமான, எளிதான கம்ப்யூட்டர் பயன்பாட்டினைத் தர இருக்கிறது குரோம் ஓ.எஸ். இந்த ஓ.எஸ். இப்போது பயன்பாட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் அவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் மாற்றானது அல்ல. இதன் வழி தனி வழி.எச்.பி., ஏசர், அடோப், லெனோவா, குவால்காம், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், ப்ரீ ஸ்கேல், இன்டெல் ஆகியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட ஒத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்கேட்ஸ் இது பற்றிக் குறிப்பிடுகையில் குரோம் ஓ.எஸ். லினக்ஸ் சிஸ்டத்தின் இன்னொரு வடிவம் போல இருக்கிறது. இதன் இயக்கம் குறித்து குறைந்த தகவல்களே வந்திருப்பதால், அது என்ன செய்திடும் என்று அறிய ஆர்வம் அதிகரிக்கிறது என்றார். குரோம் ஓ.எஸ். இலவசமா? என்ற கேள்விக்கு கூகுள் இன்னும் விடையளிக்கவில்லை. ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் இயங்குவதால் இலவசமாக அல்லது மிக மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கலாம். இதனால் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து மக்கள் இதற்கு மாறலாம்.
குரோம் ஓ.எஸ். இலவசமாகத் தரப்படும் நிலையில், நிச்சயமாக அதில் விளம்பரங்கள் இடம் பெறலாம். குரோம் ஓ.எஸ். ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவானதால், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அடுத்த ஆண்டில் குரோம் ஓ.எஸ். கம்ப்யூட்டர்கள் மிகச் சிறிய அளவில், சிறிய ஸ்கிரீன், டச் பேட், கீ போர்டு ஆகியவற்றுடன் கிளாம் ஷெல் கம்ப்யூட்டர்களாக வெளிவரலாம்.
குரோம் ஓ.எஸ். வழக்கமான ஹார்ட் டிஸ்க்குகளுக்குப் பதிலாக சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளையே சப்போர்ட் செய்திடும். இதனால் மின்சக்தி குறைந்த அளவே பயன்படுத்தப்படும்; வேகம் அதிகரிக்கும்.
இயக்க வேகம் மிக மிகக் குறைந்த அளவில் இருக்கும். ஒரு பட்டனை அழுத்தியவுடன், கம்ப்யூட்டர் தயாராகி உங்களை இணையத்தில் இடம் பெறச் செய்திடும் குரோம் ஓ.எஸ்.அனைத்துமே வெப் அடிப்படையிலான அப்ளிகேஷன் களாக இருப்பதால், நாம் எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் இன்ஸ்டால் செய்து, அப்டேட் செய்து பராமரிக்க வேண்டியதில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதில் நிலையான முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்து வருகிறதே. அந்த இடத்தில் லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றி வருகின்றன. எனவே தான் கூகுள் நெட் டாப் கம்ப்யூட்டர்களில் தன் ஓ.எஸ். பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டெஸ்க்டாப் பழக்கத்தை மூடிவிட கூகுள் திட்டமிடுகிறது.
pages
Sunday, November 29, 2009
Google Chrome OS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment