pages

Sunday, July 11, 2010

Spain உலகக் கோப்பையை வென்றது!


தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை சாம்பியன் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து முதல் முறையாக உலகக் கோப்பையை தட்டிச் சென்றது.



பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த உலகக் கோப்பைக் கால்பந்து இறுதி ஆட்டம் நேற்று ஜோஹன்னஸ்பர்க், சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடந்தேறியது.

நரம்புகள் துடிக்க, இதய ஓட்டம் தாறுமாறாக எகிற பரபரப்பின் உச்சத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டம் பெரும் விருந்தாக அமைந்தது. இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் போர்க்குணத்துடன் கடுமையாக மோதினர். இதனால் ஆட்ட நேர முடிவு வரை ஒரு கோலும் விழவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அப்போதும் போட்டி கடுமையாகவே இருந்தது. சரி பெனால்டி ஷூட்அவுட் வரை போகக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 116வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அபாரமான ஒரு கோலைப் போட்டு ஸ்பெயின் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டார்.

பெனால்டியாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேப்ரகஸ் அடித்த பந்து இனியஸ்டாவிடம் வர அதை அழகாக உதைத்தார். அந்தப் பந்து மார்ட்டன் ஸ்டீகெலின்பர்க்கைத் தாண்டி கோலாக மாறியது.

இந்த வெற்றி யின் மூலம் உலகக் கோப்பையை முதல் முறையாக தட்டிச் சென்றது ஸ்பெயின். மேலும், தொடர்ந்து நான்காவது போட்டியாக ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றி பெற்றுள்ளது ஸ்பெயின்.

உலகக் கோப்பையை இதுவரை 7 நாடுகள் மட்டுமே வென்றுள்ளன. ஸ்பெயின் 8வது நாடாக நேற்று அந்த பெருமை மிகு அணிவகுப்பில் இணைந்து கொண்டது.

மேலும் வேறு ஒரு கண்டத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இதுவரை எந்த ஐரோப்பிய அணியும் வென்றதில்லை. அதையும் முறியடித்து வேறு ஒரு கண்டத்தில் நடந்த போட்டித் தொடரை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற புதிய சாதனையையும் ஸ்பெயின் படைத்து விட்டது.
 
நேற்றைய போட்டியில் நெதர்லாந்து தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அதன் டிபன்டர் ஜான் ஹெய்டிங்கா ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதால் பதட்டத்தோடு விளையாடும் நிலைக்கும் தள்ளப்பட்டது.

3 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து மூன்று முறையும் தோல்வியைத் தழுவியதால் நெதர்லாந்து ரசிகர்கள் இதயம் நொறுங்கிப் போயினர்.




போட்டியின் முக்கிய தருணங்கள்


ஸ்பெயின் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம் ..

No comments:

Post a Comment